உகிர் கூர்த்த மதயானை
கனவொன்றில் துரத்துகிறது
இன்னொன்றில்
இருட்டுச் சந்தின் குறுக்கத்தில்
சாக்கடைத் திட்டுகளை
விரைந்து கடக்கையில்
எதையோ தவறவிட்டுத் தேடுகிறேன்
வேறொரு விடிகாலையில்
முடித்துவிட்ட வகுப்பொன்றில்
பள்ளியில் மீண்டும் சேர்ந்து
தேர்வுநாளில் நேரம்தப்பித் தவிக்கிறேன்
படிக்கும் நூலை
பார்க்கும் வேலையை
படுக்கும் இடத்தை
இவற்றில்
எதை மாற்ற
எதற்காக மாற்ற?