இப்போதெல்லாம்

நான் நடக்கும்போது

தரையில் இரைகொத்தும் பறவை

தத்திப் பறப்பதில்லை

எதிரே வரும் பெண்

துப்பட்டாவைச் சரிசெய்வதில்லை

அயர்ந்துறங்கும் தெருநாய்

காதுவிடைத்துக் கண்விழிப்பதில்லை

ஆனால் வளர்ப்புநாய்கள் மட்டும்

வள்ளென்று விழுகின்றன

சங்கிலி மட்டும் இல்லாவிட்டால்

பிறாண்டியே விடுவதுபோல்

இரும்புக்கதவிடுக்கில் பாய்கின்றன

இப்போதெல்லாம்

கனவுநாயகன்

உகிர் கூர்த்த மதயானை

கனவொன்றில் துரத்துகிறது

 

இன்னொன்றில்

இருட்டுச் சந்தின் குறுக்கத்தில்

சாக்கடைத் திட்டுகளை

விரைந்து கடக்கையில்

எதையோ தவறவிட்டுத் தேடுகிறேன்

 

வேறொரு விடிகாலையில்

முடித்துவிட்ட வகுப்பொன்றில்

பள்ளியில் மீண்டும் சேர்ந்து

தேர்வுநாளில் நேரம்தப்பித் தவிக்கிறேன்

 

படிக்கும் நூலை

பார்க்கும் வேலையை

படுக்கும் இடத்தை

இவற்றில்

எதை மாற்ற

எதற்காக மாற்ற?

கனவுநாயகன்

சொன்னகணத்துப் புனிதர்கள்

“கொள்ளையடிக்க வர்றவனே கொல்லாமக் கட்டிப்போட்டுட்டுதான் போறான். அவனை நீ என்கவுன்டர்ல போடணும்ங்கிற?”

“அவனும் வக்கீலு. நீயும் வக்கீலு. சட்ட அறிவை வைச்சு, வாதத்திறமையை வச்சு சந்தி. அதை விட்டுப்புட்டு அவன் கோர்ட்டுக்கு வரும்போது அழுகின முட்டையால அடிக்கிற?”

சொன்ன கணத்துப் புனிதர்களுக்கு நன்றி

சொன்னகணத்துப் புனிதர்கள்

அச்சம்தணித்தான்

மனிதக்குருதியின்

மெல்லிய துர்வாடையை

நீ அறிவாயா என்றான்

:0

ஈறுகளில் ரத்தம்கசியும்போது

உணர்ந்தேன் என்றான்

#-o

அச்சம்தணித்தான்

மீளாவலசை

தட்டாரக்குளத்துச் சத்தியவாணி கொளப்பாக்கத்தில் மறைந்தார்

மேலஅனுப்பானடி லெட்சுமணன் ஜோத்பூரில் மறைந்தார்

திருக்கோஷ்டிக்குடி வேங்கடராமன் ஸ்ரீராம் ஹூஸ்டனில் மறைந்தார்

கேடிஆர் ரோடு ஜிப்லேஷ் கெப்ளர்186எஃப்-இல் மறைந்தார்

மீளாவலசை

அனிச்சப் புல்

நானொரு வினோத தாவரம்

உடல் நாணல்

மலர் அனிச்சம்

 

நானொரு வினோத வாகனம்

இலக்கு அழைக்கும்

நிறுத்தம் பிடித்துவைக்கும்

 

நானொரு வினோத எந்திரம்

மென்பொருள் தாவும்

வன்பொருள் தவழும்

அனிச்சப் புல்

போட்டித் தேர்தல் மாதிரி வினாக்கள்

ஏரண கரணியத் (logical reasoning) தேர்வு

கூற்று 1: தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு முழுஅடைப்பு போராட்டமும் வெற்றிபெற இயலாது.

கூற்று 2: ஒரு முழுஅடைப்புப் போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால் எதை முன்வைத்து அப்போராட்டம் நடைபெற்றதோ அக்கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று பொருள்கொள்ளப்படும்.

மேற்கண்ட கூற்றுகளிலிருந்து பின்வருவனற்றுள் எந்த/எந்தெந்த துணிபுகளை அடையலாம்?

(அ) அரசாங்கத்தின் ஆதரவு இருந்தாலே எந்த ஒரு முழுஅடைப்புப் போராட்டமும் வெற்றிபெற்றுவிடும்

(ஆ) கோரிக்கைக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் அரசாங்கத்தின் ஆதரவின்றியே முழு அடைப்பு வெற்றிபெறும்

(இ) அரசாங்கத்தின் ஆதரவு இல்லாத நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவது அக்கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதாகும்

(ஈ) மேற்கண்ட எல்லாம் சரி

(உ) மேற்கண்ட எதுவுமே சரியில்லை

உளஅளவியல் (psychometric) தேர்வு

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிற மக்கள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பதவியிழக்கிறார். இந்தச் சூழ்நிலையில் பின்வருவனற்றுள் எது சரி என்று உங்களுக்குப்படுகிறது?

(அ) மாநிலத்தின் நலன்களைப் பேணுகிற வலுவான பிற தலைவர்கள் இல்லாத நிலையில் அவரை ஆதரிப்பதே மாநில நலன் கருதி நியாயமான செயல்

(ஆ) ஊழல் செய்த மற்றவர்கள் அத்தகைய தண்டனைகளுக்கு ஆளாகாதபோது இவரை மட்டும் தண்டிப்பது அநியாயம்

(இ) வேறொரு மாநிலத்தில் வழக்கு நடைபெற்றுள்ள நிலையில் இத்தகைய தண்டனைக்கு உள்நோக்கம் கற்பிக்க போதுமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து அவர் பின்நிற்பதே நியாயம்

(ஈ) ஊழல் என்பது மனித உரிமை மீறல். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதே நியாயம்

(உ) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முதல்வருக்கு எதிரான சதி நடந்திருப்பதற்கு அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் முகாந்திரங்கள் இருப்பதாகப்படுவதால் அவரை ஆதரிப்பதே நியாயம்

போட்டித் தேர்தல் மாதிரி வினாக்கள்

ஒரு சுருக்கமான சமகால வரலாறு

செல்வராஜ் குடிபோதையில் குப்பைத்தொட்டிக்கு அருகில் புரோட்டா பார்சலுடன் மயங்கிக்கிடக்கையில் தின்னவந்த தெருநாயுடன் சண்டைபோட்டு ரேபிஸ் தாக்கி இரண்டுமாதம் கழித்துச் செத்தான். சேகர் பறக்கும் விமானத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் இருக்கையோடு கட்டிவைக்கப்பட்டு சென்னையில் இறங்கியதும் கைதுசெய்யப்பட்டான். சங்கர் குடிபோதையில் உள்ளூர் மந்தையில் வேட்டி அவிழ்ந்துகிடக்க அவன் மனைவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். பிரகாஷ் குடிபோதையில் இருசக்கரம் வாகனம் ஓட்டி மரத்தில்மோதிச் செத்தான். வனிதா குடித்துவிட்டு கணவனை பக்கத்துவீட்டுப் பெண்ணை வன்புணரவைத்துப் பார்த்துமகிழ்ந்தாள். அந்தோணிக்கு மதுவாங்கிக் கொடுத்து அவனது நண்பர்கள் கல்லைத்தூக்கிப் போட்டுக்கொன்றார்கள். ராமநாதனுக்கும் அழகுவுக்கும் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிந்தது. நவீன் நள்ளிரவில் போதையில் ஓட்டிவந்த ‘ஆடி’ கார் நடைபாதையில் படுத்திருந்த குடும்பத்தின் மீது ஏறியதில் சிறுமி துர்கா செத்துப்போனாள். சாகுல் அமீது குடித்துவிட்டு ஓட்டிய ஆம்னிபேருந்து ஒரு லாரியில் உரசியபின்பு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அவன் தலத்திலேயேயும் இன்னொரு பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர். ஹரிஹரன் குடித்துவிட்டு மேலதிகாரியுடன் சண்டைபோட்டதில் கட்டாயப் பணி ஓய்வு தரப்பெற்றான். பெரியசாமி குடித்துவிட்டு அங்குத்தாயை அடிக்க அவனது மகன் திரவியம் ஆத்திரத்தில் பெரியசாமியை அரிவாளால் வெட்டிக்கொன்றான். போதையில் இருந்த தலைமைக் காவலர் சண்முகப்பாண்டியன் மகனுக்கு பயணச்சீட்டு கேட்ட பேருந்து நடத்துனரை அடித்துவிட ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேருந்துகளை ஆங்காங்கு நிறுத்தி வேலைநிறுத்தம் செய்தனர். பொறியியல் மாணவன் சுந்தர் குடித்துவிட்டுத் தேர்வெழுதப்போய் விரிவுரையாளருடன் தகராறு செய்ய ஓராண்டு இடைநீக்கம் அல்லது ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டான். கல்யாண விருந்தில் மது அருந்திவிட்டு வந்த போஸ் உள்ளிட்ட ஐவரும் அவர்களது சுமோ தனியார் பேருந்தில் மோதியதில் பலியாக ஊரே சோகத்தில் மூழ்கியது.

ஒரு சுருக்கமான சமகால வரலாறு

உச்சாடனத்துக்கேற்ற சில நடைவழிமந்திரங்கள்

“கருமேகத்திட்டு ஒன்று கதிர்மறைத்த கணநேர நிழல் அது. வீடு வரை வெயில் இப்படித்தான் உறைக்கும். தலையே தாங்கிக்கொள்”

“சேர்ந்து நடப்பவர் காண். எடுத்த அடிவைப்பிலும் இடக்கை வீச்சிலும் வலக்கை அசைவிலும் என்னவொரு இசைவு. முகம் பார்க்காமலேயே விரைகையிலும் இவ்வுதடு முடிக்க அவ்வுதடு தொடங்கும் பேச்சிசை. சேர்ந்தும் நடைபயில்”

“எட்டு மணிக்குள் சேர என்னதான் ஓடினாலும் சொல்லிவைத்து ஒரே வண்ணச் சேலை. கூந்தலில் ஆளுக்கொரு வகை பூச்சரம். அழகுணர்ச்சி அவரிடம் பயில்”

“மழையும் வேண்டும். மாநகர வாழ்வும் வேண்டுமா? தேங்குநீரில் கசிவிறக்கும் புதைமின்வடமும், நீர்சுழித்திறங்கும் திறந்த ஆட்குழியும், புழுதிக்குழம்பைச் சிதற்றும் வாகனமும் பார்த்து நட.”

உச்சாடனத்துக்கேற்ற சில நடைவழிமந்திரங்கள்

சில கட்டுரைகளை இப்படி முடிக்கத் திட்டமிருக்கிறது

(1)

ஊரில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் தென்னந்தோப்புகளில் ஒன்றின் நடுவே வளர்ந்துவந்த நவ்வல்மரம் இப்போது பழுத்துக்குலுங்குகிறது. ‘பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால்’ என்று சும்மாவா சொன்னான்? எங்கெல்லாம் இரண்டு பேர் வசதியாக அமர்ந்துபேச நிழலோ, திண்ணையோ, மேடையோ இருக்கிறதோ அங்கெல்லாம் தின்று துப்பப்பட்ட நாவல்பழ கொட்டைகள். ஏதாவதொன்று முளைக்காமலா போய்விடும்? இப்படி நம்பிக்கை கொள்வதற்கும் ஏதாவதொன்று அவ்வப்போது நடக்கவே செய்கிறது.


 (2)

முன்பெல்லாம் எங்கள் வீட்டு மாடிச்சுவரில் மழைபெய்து முடித்த நாட்களில் கைவைத்தால் மின்கசிவால் சுர்ரென்று மெலிதாக அதிர்ச்சி ஏற்படும். கைவிரலில் மேற்தோல் நீங்கிய சிறுகாயத்தில் பட்டால் சற்று வலுவாகவே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. இதையெல்லாம் உணருகிற சுரணை வேண்டுமென்றால் கொஞ்சம் ஈரநைப்பு வேண்டும். தோல் தடிக்காமல் இருக்கவேண்டும்.

சில கட்டுரைகளை இப்படி முடிக்கத் திட்டமிருக்கிறது