(1)
ஊரில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் தென்னந்தோப்புகளில் ஒன்றின் நடுவே வளர்ந்துவந்த நவ்வல்மரம் இப்போது பழுத்துக்குலுங்குகிறது. ‘பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால்’ என்று சும்மாவா சொன்னான்? எங்கெல்லாம் இரண்டு பேர் வசதியாக அமர்ந்துபேச நிழலோ, திண்ணையோ, மேடையோ இருக்கிறதோ அங்கெல்லாம் தின்று துப்பப்பட்ட நாவல்பழ கொட்டைகள். ஏதாவதொன்று முளைக்காமலா போய்விடும்? இப்படி நம்பிக்கை கொள்வதற்கும் ஏதாவதொன்று அவ்வப்போது நடக்கவே செய்கிறது.
(2)
முன்பெல்லாம் எங்கள் வீட்டு மாடிச்சுவரில் மழைபெய்து முடித்த நாட்களில் கைவைத்தால் மின்கசிவால் சுர்ரென்று மெலிதாக அதிர்ச்சி ஏற்படும். கைவிரலில் மேற்தோல் நீங்கிய சிறுகாயத்தில் பட்டால் சற்று வலுவாகவே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. இதையெல்லாம் உணருகிற சுரணை வேண்டுமென்றால் கொஞ்சம் ஈரநைப்பு வேண்டும். தோல் தடிக்காமல் இருக்கவேண்டும்.