இடை வெளி

ஈரப் பச்சை வயல்களுக்கிடையே

இருக்கிறது ஒரு உவர்நிலம்

வெளுத்த மண்பொட்டல்

வாய்க்கால் இருக்கும் பக்கம்

நீர் கசிந்து உப்புப் பரிந்திருக்கும்

கண்ணாடிச் சில்லுகள்

காக்காமுட்கள்

மத்தியில் ஒரு நைந்த செந்துணி

பாதி புதைந்து வெளித்தெரியும்

 

வீடுகளுக்கிடையே இருக்கிறது

வில்லங்கத்திலிருக்கும் காலிமனை

செழித்த சீமைக்கருவேலப் புதர் நிழல்

பால்பச்சை எருக்கஞ்செடிகள்

மழுமட்டைச்செடிகளில்

பூத்துச்சிரிக்கும் ரேடியோப்பூக்கள்

எங்கிருந்தோ இடிபட்டுக் கொட்டப்பட்ட

கான்கிரீட் கட்டி ஒன்றிலிருந்து

காளானொன்று முண்டி முளைக்கும்

இடை வெளி

வாடிக்கையாளர் பேருவகை

‘வாருங்கள்!

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களா

ஏற்றுமதிக் காலணி செய்யும் பெண்களா

கட்டுமானத் தொழிலாளர்களா

யாரைக் கூட்டிச்செல்லும் ஊர்தி?’

 

‘மூன்றுமே.

ஒரே குழுமம்

ஒரே சாலை

மூன்று வித வண்டிகள்’

 

‘வசதியாய்ப் போயிற்று’

 

‘தேவைக்குறிப்பு கீழே:

 

விவரம் த.தொ.பணியாளர் ஏ.கா.பெ.பணியாளர் வ.இ.க.தொழிலாளர்
வாகனம் பேருந்து வேன் பேருந்து
பழையது/புதியது புதியது (<2 ஆண்டு) பழையது பழையது
தயாரிப்பு நிறுவனம் வோல்வோ மகிந்திரா ஏதாகிலும்
ஆட்கள் (நிர்ணயம்) 30 – 35 12 – 15 50 – 60
ஆட்கள் (அதிகபட்சம்) 30 – 35 20 – 30 80 – 100
வேறு வசதி * சாய்விருக்கை

* கம்பியில்லா இணைய இணைப்பு

* இடைக்கால மெலடிகளை இசைக்கும் ஆடியோ எதுவுமில்லை

 

புரிந்தது.

சொல்லவே தேவையில்லை.

பழைய மகிந்திரா பச்சை நிறத்தது

கலர் கலராய் குமிழ் விளக்குடன்.

வட இந்திய தொழிலாளர் பேருந்தில்

பின்புறம் கண்ணாடி இருக்காது

படிக்கருகில் இருக்கையே இருக்காது’

 

‘விலை விகிதம்?’

 

‘அதிகம் மாறாது.

ஒன்றில் வாங்கும் செலவு கூடுதல்

ஒன்றில் ஓட்டும் செலவு’

வாடிக்கையாளர் பேருவகை

அழித்தல் செயல்பாடு நிகழும் விதம்

vaadhumai ilai

நிறுவிய மென்பொருளை

நீக்குகின்ற பணி

20%..21%….22% என

சிறுகச் சிறுக நிகழ்கிறது

 

கருவேலங்கொப்பில் அமர்ந்த

வாலாட்டிக்குருவி

பார்த்துக்கொண்டிருக்கும்போதே

பறந்துவிடுவதைப் போல

 

இளவேனில் வாரமொன்றில்

செழித்து முதிர்ந்த

வாதுமை இலைகள்

சடசடவென உதிர்ந்து

சருகாதல் போல

 

எப்படியெல்லாமோ

நிகழவேண்டுமென்று

நீங்கள் நினைக்கிறீர்கள்

 

உள்ளே என்னென்ன

நடக்கிறதோ

நமக்கெங்கே தெரியும்

 

சிலவேளைகளில்

என்ன நீக்கினாலும்

எல்லாத் தடயங்களையும்

துடைத்தொழிக்க முடியாது

 

அழித்தல் செயல்பாடு நிகழும் விதம்

மூலவரே மூக்கைப் பொத்திக்கிட்டாரு போ

mUlavar mUkku

அவர் இருக்குமிடந்தான்

நமது கோயில்

அவர் முன்பாகக்

கடந்து செல்லும்போது

சிறிது நின்று

காலணி தளர்த்தி

கரங்குவித்துயர்த்தி

வணங்கலாம்

பக்கவாட்டில் முழங்கை படர்த்தி

நெஞ்சுதொட்டு இறைஞ்சலாம்

அல்லது

ஏதோ குளிர்பானப் புட்டி வைத்திருப்பதுபோல

உதடுவரை ஒரு கையுயர்த்தி

முத்தமிடலாம்

ஒன்றுமில்லையென்றால்

அலைபேசியைக் காதில்வைத்து

கவனியாததுபோல் கடந்துவிடலாம்

அடக்கமுடியாமல்

காற்றுபிரிய விடுவதெல்லாம்

சற்றுக்கும் சற்று

மிகையாகவே மிகை

மூலவரே மூக்கைப் பொத்திக்கிட்டாரு போ

நேரடியாக ஒரு கருத்து

Poster

விரைவீக்க சிகிட்சை

வேலைவாய்ப்புப் பயிற்சி

விடுதி, விடுதலை நற்செய்தி,

வேறுபல விளம்பரங்கள்

வெற்றிகரமான முதல்காட்சியைக்

கொண்டாடும் திரைப்படம்

‘விளிம்புக் குழு’க்களின் கண்டன முழக்கம்

‘பேரியக்கங்களின்’ ஆராதனைக் குரல்கள்

அவனை ஈர்க்க

வழிமீது காத்திருக்கும்

விழிவைத்துப் பார்த்திருப்பான்

 

இவ்விதம்

சுவரொட்டிகளை

வேடிக்கை பார்ப்பதை

விட்டுவிடும் அன்றுதான்

மகன்கள் உருப்படுவான்கள் என்பது

தமிழத் தந்தைகளின்

நெடுநாள் நம்பிக்கை

 

இவற்றை ஒட்டவிடாது

தடுத்துவிட்டால்

நகரம் அழகாகிவிடும் என்பது

ஆள்பவர்களின் நம்பிக்கை

 

அப்பாக்களும் சுவரொட்டி

பார்த்து வளர்ந்தவர்கள்தானே

ஆள்கட்சிகளும் சுவரொட்டி

ஒட்டி வளர்ந்தவைதானே

நேரடியாக ஒரு கருத்து

சிவந்த நீர்மம்

Sivantha Neermam

கொச்சபாம்பா என்பது

கேரளத்து ஊரென்றும்

செவ்விந்தியர்கள் என்பவர்கள்

நம்மிலும் நிறம்வெளிறிய

மலையாளிகள் என்றும்

நம்புவது நல்லது

ஏனெனில்

ஆபத்து நமக்குமிக

அணுக்கத்தில் இருப்பதை

அது உணர்த்துகிறது

30/05/14

சிவந்த நீர்மம்

‘உம்’மென்றிருப்பவரைப் பேசவைத்தல்

Karril alaiyum kesam

மேசைவிசிறி கோளாறாகி

சுழலாமல் போய்விட

காற்று வரவில்லை

 

இருசக்கர வாகனம்

ஏறிப் பின்னமர்ந்து

எடுத்து மடியில்வைத்து

சரிசெய்ய விரைய

காற்று நன்றாக வருகிறது

விசிறி சுழல்கிறது

24/05/14

 

‘உம்’மென்றிருப்பவரைப் பேசவைத்தல்

படிநிலைக்கும் சுழற்சி உண்டு

padinilaiyin suzarsi

அகத்தியர் அருவியில் குளிப்பவர்கள்

அடிவாரத்தில் ஆற்றில்

குளிப்பவர்களைப் பார்த்து மகிழ்கிறார்கள்

கல்யாண தீர்த்தம் அருகே கால் நனைப்பவர்கள்

இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்

பாண தீர்த்தம் வரை சென்றவர்களுக்கு

உள்ளூர ஒரு திருப்தி

விசும்போ

எல்லாவற்றுக்கும் மேலே

இருந்தும் இல்லாதிருந்தும்

எங்கிருந்தோ எடுத்து

எங்கேயோ கொடுத்துக்கொண்டிருக்கிறது

20/05/14

படிநிலைக்கும் சுழற்சி உண்டு

மந்திமார் கதை

mandhimaar kathai

மதிய உணவு சாப்பிடுகையில்

மரம்மீதொளிந்தமர்ந்து பார்த்தன

தண்டரைக் குரங்குகள்

 

திருப்பரங்குன்றம்

மொட்டைமலைக் குரங்குகள்

கிட்ட இருக்கும் கல்லூரி மாணாக்கரின்

வட்டக்கிண்ணங்கள்

திருடித்திறந்து

தின்னத்தெரிந்தவை

 

அழகர்கோயில் கூட்டங்கள்

தைரியமாகத் தட்டிப்பறிப்பவை

 

வீசியெறியும் பண்டத்துக்காய்

வந்து நின்றாலும்

துள்ளல்நடையில் வருவதிலும்

வால்சுருட்டி அமர்தலிலும்

கம்பீரமானவை பாபநாசத்துக்

கருமுக மந்திகள்

 

பரிணாமத்தின்

சிறுகண்ணியொன்றின்

குறும்பரப்பின்

நுண்ணிழைகளில்

தாவிச் செல்லும் இவை

என்னிடம் சிக்கிக்கொள்கின்றன

18/05/14

மந்திமார் கதை