உதார்விட்டுத் திரியும் மரபு எமக்குண்டு

udhaar vidum marabu

நகுலனையோ பிறரையோ

போலிசெய்யாதே என்றான் விமர்சகன்

திமிராகக் கேட்டேன்

‘எந்த நகுலன்?’ என்றல்ல

‘யார் நகுலன்?’ என்று

(இதற்கிடையே

பக்கத்து வீட்டுச் சிறுவனை

‘டே, நகுல்!’ என்று விளித்தபோது

திரும்பவும் திருத்தினான்

‘ஜி இல்லை அங்கிள், கே!

ந(க்)குல்’)

செருக்குற மொழிவேன்:

நான் எழுதியது நான் எழுதியதுதான்

நான் எழுதியது எழுதியதுதான்

18/05/14

உதார்விட்டுத் திரியும் மரபு எமக்குண்டு

கவலைச்சுவை

Kavalaichuvai

கரிப்புச் சுவை பொங்க

கவிதை எழுதும்படி

கழுதைக்கு அப்படி

என்னதான் நேர்ந்துவிட்டது?

 

இப்படி எதையாவது

எழுதிவிட முடிகிறதென்பதே

இனிப்பான விஷயந்தான் இல்லையா?

02/01/14

கவலைச்சுவை

இதற்கு நப்பாசை என்று தலைப்பிடுவேன்

nappaasai

சிறிது உப்பு

அந்த சாம்பாரை

சுவை மிகுந்ததாக்கிவிடுவதைப் போல

 

சின்ன மூக்குத்தி

அந்தப் பெண்ணைப்

பேரழகியாக்கிவிடுவதைப்போல

 

இருட்குகையின் உள்ளே

பாறைப்பிளவு வழி

ஒற்றைக் கீற்றாய்

உள்நுழையும் கதிரொளி

விரவி வெளிச்சம் தருவதுபோல

 

எனது கவிதை

எந்த இதழையும்

செழுமை கொண்டதாக்குகிறது

22/11/13

இதற்கு நப்பாசை என்று தலைப்பிடுவேன்

காதல்மீது புழுத்த நாய் ஒண்ணுக்கடிக்காது

Amoresperros

என் பங்குக்கு

சிறிதாகவேனும் ஒரு

காதல் கவிதையை

எழுதி விடுகிறேன்

 

காதல் என்பது

கடவுள் மாதிரி

இதுவிஷயத்தில்

நானொரு நாத்திகன்

 

காதல் என்பது

கைவிலங்கு

கால விரயம்

காம ஒப்பனை

 

ச்சீச்சி…

இந்தப் பழம்

ரொம்பப் புளிக்கும்

16/07/2008

காதல்மீது புழுத்த நாய் ஒண்ணுக்கடிக்காது

ஆமா, உங்களுக்கு வேற வேலையில்ல பாருங்க…

 

Kavithai Kavani

தொடர்ந்து

கவனித்து வாருங்கள்

 

என்றேனும் ஒருநாள்

நான் கவிதைகளை

எழுதிவிடக் கூடும்

16/07/2008

ஆமா, உங்களுக்கு வேற வேலையில்ல பாருங்க…

முண்டமும் மூளியும்

Mundamum Mooliyum

தலைப்புகள் இடுவதற்குச்

சல்லையாய் இருக்கிறது

 

தலைப்புகள் அற்றவை

முண்டமாய் நிற்கின்றன

தலைப்புகள் உள்ளவை

மூளியாய் நிற்கின்றன

 

மூளிக்கு ஒரே தலை

முண்டத்துக்கு ஆயிரந் தலைகள்

16/07/08

முண்டமும் மூளியும்

…களின் கவித்திறம் – ஒரு திறனாய்வு

IKE Naan Obama

 

பதவிகளில் இருப்பவர்கள்

கவிதைகள் முடைகிறார்கள்

 

அப்படைப்புகள்

பலத்த பாராட்டுக்குள்ளாகின்றன

 

எல்லாத் திசைகளிலிருந்தும்

ஏவப்படுகின்றன

விருதுக் கணைகள்

 

ஆராய்ச்சி ஈக்கள்

வந்து

அப்பிக் கொள்கின்றன

 

படைப்பு நாற்றம்

பல மொழிகளுக்கும்

பரவுகிறது

 

இனிவரும்

பட்டமளிப்பு விழாக்களில்

கருப்புத் தொப்பிகளுக்குப்

பதிலாய்

முடைந்த கவிதைகளைத்

தலையில் கவிழ்த்துக்கொள்வதென்று

முடிவு செய்கிறார்கள்

பல்கலைக்கழகங்களில்.

09/07/2008

…களின் கவித்திறம் – ஒரு திறனாய்வு

எருக்க விதையும் முளைக்கவே பறக்கும்

Erukka Vithai

 

எருக்க விதை சுமந்த
பஞ்சுப் பாராசூட்
பறத்தல் அழகுதான்

 

முளைத்தாலோ சீண்டுதற்கு
ஆடுமில்லை; ஆளுமில்லை

 

என்றாலும், விதை அது;
பறக்கத்தான் வேண்டும்
முளைக்கத்தான் வேண்டும்

19/12/13

எருக்க விதையும் முளைக்கவே பறக்கும்

நினைவு மிருகமாயுள்ள காடு

Ninaivu mirugam ulavum kaadu

 

நினைவுக் குரங்கும்

மறதிப் புலியும்

உலவும் காடு

 

குறுகிப் போய்

குருட்டுப் போக்கில்

கலங்கிப் பாயும்

எண்ண நீரோடை

 

பொதுவாக வறண்டுகிடக்கும் வனத்தில்

இடையிடையில் எப்போதாவது

கவிதைச்சாரல்

07/01/14

நினைவு மிருகமாயுள்ள காடு

கவிதை சொல்லக் காரணம்

Kavithai made easy

 

 

இது வசதியாக இருக்கிறது

 

எதுவுமே இல்லையென்றாலும்

ஏதோ இருப்பதுபோலவே காட்டலாம்

 

சொல்ல வருவது பற்றிய தெளிவின்றியே

சொல்லி முடித்துவிடலாம்

 

யாப்பும் அணியும்

ஆய்வும் அடிக்குறிப்பும்

எதுவுமே தேவையில்லை

 

சிறியதே போதும்

வரி என்பது ஓரிரு சொற்கள்

படைப்பு என்பது ஓரிரு வரிகள்

 

சொல்லுதல் யார்க்கும் எளிய;

கவிதை சொல்லுதல் அதனினும் எளிய.

27/12/13

கவிதை சொல்லக் காரணம்