மீளாவலசை

தட்டாரக்குளத்துச் சத்தியவாணி கொளப்பாக்கத்தில் மறைந்தார்

மேலஅனுப்பானடி லெட்சுமணன் ஜோத்பூரில் மறைந்தார்

திருக்கோஷ்டிக்குடி வேங்கடராமன் ஸ்ரீராம் ஹூஸ்டனில் மறைந்தார்

கேடிஆர் ரோடு ஜிப்லேஷ் கெப்ளர்186எஃப்-இல் மறைந்தார்

மீளாவலசை

சில கட்டுரைகளை இப்படி முடிக்கத் திட்டமிருக்கிறது

(1)

ஊரில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் தென்னந்தோப்புகளில் ஒன்றின் நடுவே வளர்ந்துவந்த நவ்வல்மரம் இப்போது பழுத்துக்குலுங்குகிறது. ‘பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால்’ என்று சும்மாவா சொன்னான்? எங்கெல்லாம் இரண்டு பேர் வசதியாக அமர்ந்துபேச நிழலோ, திண்ணையோ, மேடையோ இருக்கிறதோ அங்கெல்லாம் தின்று துப்பப்பட்ட நாவல்பழ கொட்டைகள். ஏதாவதொன்று முளைக்காமலா போய்விடும்? இப்படி நம்பிக்கை கொள்வதற்கும் ஏதாவதொன்று அவ்வப்போது நடக்கவே செய்கிறது.


 (2)

முன்பெல்லாம் எங்கள் வீட்டு மாடிச்சுவரில் மழைபெய்து முடித்த நாட்களில் கைவைத்தால் மின்கசிவால் சுர்ரென்று மெலிதாக அதிர்ச்சி ஏற்படும். கைவிரலில் மேற்தோல் நீங்கிய சிறுகாயத்தில் பட்டால் சற்று வலுவாகவே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. இதையெல்லாம் உணருகிற சுரணை வேண்டுமென்றால் கொஞ்சம் ஈரநைப்பு வேண்டும். தோல் தடிக்காமல் இருக்கவேண்டும்.

சில கட்டுரைகளை இப்படி முடிக்கத் திட்டமிருக்கிறது

இடை வெளி

ஈரப் பச்சை வயல்களுக்கிடையே

இருக்கிறது ஒரு உவர்நிலம்

வெளுத்த மண்பொட்டல்

வாய்க்கால் இருக்கும் பக்கம்

நீர் கசிந்து உப்புப் பரிந்திருக்கும்

கண்ணாடிச் சில்லுகள்

காக்காமுட்கள்

மத்தியில் ஒரு நைந்த செந்துணி

பாதி புதைந்து வெளித்தெரியும்

 

வீடுகளுக்கிடையே இருக்கிறது

வில்லங்கத்திலிருக்கும் காலிமனை

செழித்த சீமைக்கருவேலப் புதர் நிழல்

பால்பச்சை எருக்கஞ்செடிகள்

மழுமட்டைச்செடிகளில்

பூத்துச்சிரிக்கும் ரேடியோப்பூக்கள்

எங்கிருந்தோ இடிபட்டுக் கொட்டப்பட்ட

கான்கிரீட் கட்டி ஒன்றிலிருந்து

காளானொன்று முண்டி முளைக்கும்

இடை வெளி

சிவந்த நீர்மம்

Sivantha Neermam

கொச்சபாம்பா என்பது

கேரளத்து ஊரென்றும்

செவ்விந்தியர்கள் என்பவர்கள்

நம்மிலும் நிறம்வெளிறிய

மலையாளிகள் என்றும்

நம்புவது நல்லது

ஏனெனில்

ஆபத்து நமக்குமிக

அணுக்கத்தில் இருப்பதை

அது உணர்த்துகிறது

30/05/14

சிவந்த நீர்மம்

‘உம்’மென்றிருப்பவரைப் பேசவைத்தல்

Karril alaiyum kesam

மேசைவிசிறி கோளாறாகி

சுழலாமல் போய்விட

காற்று வரவில்லை

 

இருசக்கர வாகனம்

ஏறிப் பின்னமர்ந்து

எடுத்து மடியில்வைத்து

சரிசெய்ய விரைய

காற்று நன்றாக வருகிறது

விசிறி சுழல்கிறது

24/05/14

 

‘உம்’மென்றிருப்பவரைப் பேசவைத்தல்

படிநிலைக்கும் சுழற்சி உண்டு

padinilaiyin suzarsi

அகத்தியர் அருவியில் குளிப்பவர்கள்

அடிவாரத்தில் ஆற்றில்

குளிப்பவர்களைப் பார்த்து மகிழ்கிறார்கள்

கல்யாண தீர்த்தம் அருகே கால் நனைப்பவர்கள்

இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்

பாண தீர்த்தம் வரை சென்றவர்களுக்கு

உள்ளூர ஒரு திருப்தி

விசும்போ

எல்லாவற்றுக்கும் மேலே

இருந்தும் இல்லாதிருந்தும்

எங்கிருந்தோ எடுத்து

எங்கேயோ கொடுத்துக்கொண்டிருக்கிறது

20/05/14

படிநிலைக்கும் சுழற்சி உண்டு

உங்களுக்கே உங்களுக்காக: உன்னதமான உடனடி மழை™

Mazhai

முன்பொரு காலத்தில்

மழைபெய்ய

நல்லார் ஒருவர்

உளராக வேண்டியிருந்தது

(முறைகோடா மன்னவனும்

மறைமறவா அந்தணனும்

உறைசால் பத்தினியும்

வேண்டுமென்பதுவும் பாடம்)

 

பின்பு

மாரியம்மன் பூக்குழியோ

வவ்வால்தோட்ட சந்தனக்கூடையோ

சஷ்டி விரதமோ

அழகர் ஆற்றிலிறங்குதலோ

தேவைப்பட்டது

 

இன்று

காற்றழுத்தத் தாழ்நிலையோ

வெப்பச் சலனமோ

வளிமண்டல மேலடுக்கின் சுழற்சியோ

தேவைப்படுகிறது

 

நாளை

மழைக்கே

தேவையிருக்காதோ என்னமோ

18/05/14

உங்களுக்கே உங்களுக்காக: உன்னதமான உடனடி மழை™

தூய்மையின் அளவு ஆவன செய்தல்

Thooymai Enpathu...

ஊரில் இருக்கையில்

மார்கழியில் விடியுமுன்னேயே

குளிக்காவிட்டால் பீடை

 

நகர் நகர்ந்தபின்

விடுமுறைநாள் முழுக்க

குளிக்காதிருந்தால் கொஞ்சம்

ஒரு மாதிரியிருக்கும்

 

இரவுகளும் பகல்களுமாய்

இருநாட்கள் நீளும்

இரயில் பயணங்களுக்குப்

பழகியபின்னும்

 

புறந்தூய்மை நீரால்தான் அமைகிறது –

ஆனால் வசதிப்படும்போது

25/12/13

தூய்மையின் அளவு ஆவன செய்தல்

அற்ற வயல்கள் முன் நிறைநீர்நிலை

aRRa kulam mun Nirai neernilai

 

மடைகளைத் தூர்த்துக்கொண்டு

மனையடிக் கல்முளைகளுக்குக்

குண்டி திருப்பி

நிறைந்துநிற்கிறது கண்மாய்

 

முக்குளிப்பான்கள் கொப்பளிக்க

முகவண்டு நீந்த

குறையொன்றுமில்லை போலும்

 

போதாதற்கு தென்னங்கீற்றிலிருந்து

திடீரெனக் கிளம்பி உட்புக்குத்

தலைநீட்ட்ட்டும் பாம்புத்தாரா வேறு.

 

பொழப்பத்த ஆள்காட்டி

‘டிட் யூ டூ இட்’ ‘டிட் யூ டூ இட்’ என்று

திரும்பத் திரும்பத் துளைத்தெடுக்கும்

 

மொட்டைப் பனையின்

ஒற்றைக் காடை

ஒரு பதிலும் சொல்லாது

 

முட்டைக் கரிச்சான்களின்

ஹெலிகாப்டர் பறத்தல்

தலையில் தட்டிவிடக் கூடாதென்று

அஞ்சும் பெண்கள் எவருமில்லை இப்போது

 

கொஞ்சம் நல்ல மனநிலை இருந்தால்

இந்த ஆவாரம்பூவையும் தும்பையையும்

பற்றியும்கூட கொஞ்சம் சொல்லலாம்தான்

 

காலம் அப்படியா இருக்கிறது?

கரைநெடுக கருவேல நிழல்திட்டுகளில்

காலி நீர் உறைகள், உடைந்த பாட்டில்கள்

 

காப்பர் சேகரித்துக் காசாக்க

கழிவு வயர் எரிக்கும் அப்பனும் பிள்ளையும்

 

டயாக்சின்களுக்கும் ஃப்யூரான்களுக்கும் அஞ்சி

ஓசோன் சுவாசித்துத் திரும்பிவிட்டனர்

வாக்கிங் பழகிவிட்ட கிராமத்துச் சனங்கள்

 

என்ன சொல்ல?

தந்தை மகனுக்கு

நஞ்சுப் புகையூட்டும் காலமிது.

 

மழுமட்டைச் செடி மீதமர்ந்து

நிச்சலனமாய்

நீள விரித்து சிறகுலர்த்தும்

நீர்க்காகம்

08/12/2013

அற்ற வயல்கள் முன் நிறைநீர்நிலை