செல்வராஜ் குடிபோதையில் குப்பைத்தொட்டிக்கு அருகில் புரோட்டா பார்சலுடன் மயங்கிக்கிடக்கையில் தின்னவந்த தெருநாயுடன் சண்டைபோட்டு ரேபிஸ் தாக்கி இரண்டுமாதம் கழித்துச் செத்தான். சேகர் பறக்கும் விமானத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் இருக்கையோடு கட்டிவைக்கப்பட்டு சென்னையில் இறங்கியதும் கைதுசெய்யப்பட்டான். சங்கர் குடிபோதையில் உள்ளூர் மந்தையில் வேட்டி அவிழ்ந்துகிடக்க அவன் மனைவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். பிரகாஷ் குடிபோதையில் இருசக்கரம் வாகனம் ஓட்டி மரத்தில்மோதிச் செத்தான். வனிதா குடித்துவிட்டு கணவனை பக்கத்துவீட்டுப் பெண்ணை வன்புணரவைத்துப் பார்த்துமகிழ்ந்தாள். அந்தோணிக்கு மதுவாங்கிக் கொடுத்து அவனது நண்பர்கள் கல்லைத்தூக்கிப் போட்டுக்கொன்றார்கள். ராமநாதனுக்கும் அழகுவுக்கும் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிந்தது. நவீன் நள்ளிரவில் போதையில் ஓட்டிவந்த ‘ஆடி’ கார் நடைபாதையில் படுத்திருந்த குடும்பத்தின் மீது ஏறியதில் சிறுமி துர்கா செத்துப்போனாள். சாகுல் அமீது குடித்துவிட்டு ஓட்டிய ஆம்னிபேருந்து ஒரு லாரியில் உரசியபின்பு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அவன் தலத்திலேயேயும் இன்னொரு பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர். ஹரிஹரன் குடித்துவிட்டு மேலதிகாரியுடன் சண்டைபோட்டதில் கட்டாயப் பணி ஓய்வு தரப்பெற்றான். பெரியசாமி குடித்துவிட்டு அங்குத்தாயை அடிக்க அவனது மகன் திரவியம் ஆத்திரத்தில் பெரியசாமியை அரிவாளால் வெட்டிக்கொன்றான். போதையில் இருந்த தலைமைக் காவலர் சண்முகப்பாண்டியன் மகனுக்கு பயணச்சீட்டு கேட்ட பேருந்து நடத்துனரை அடித்துவிட ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேருந்துகளை ஆங்காங்கு நிறுத்தி வேலைநிறுத்தம் செய்தனர். பொறியியல் மாணவன் சுந்தர் குடித்துவிட்டுத் தேர்வெழுதப்போய் விரிவுரையாளருடன் தகராறு செய்ய ஓராண்டு இடைநீக்கம் அல்லது ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டான். கல்யாண விருந்தில் மது அருந்திவிட்டு வந்த போஸ் உள்ளிட்ட ஐவரும் அவர்களது சுமோ தனியார் பேருந்தில் மோதியதில் பலியாக ஊரே சோகத்தில் மூழ்கியது.